கொரோனாவுக்கு இவை மட்டுமே அறிகுறிகள் அல்ல...வைத்திய நிபுணரின் விசேட தகவல்....!
கொரோனா என்பதற்கு காய்ச்சல், தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி. வயிற்றோட்டம், மூச்சுத்திணரல், மூக்கடைப்பு ,மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும் அதற்கு அறிகுறியாகவே கொள்ளப்படுமென பொது வைத்திய நிபுணர் கஜந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. உலகத்திலும் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் டெல்டா திரிபின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது.
இதுவரையில் 176 பேர் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்துள்ளனர். ஒரு வாரத்தில் ஒரு கொரோனா மரணம் ஏற்பட்ட யாழ்ப்பாணத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆகவே இதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கொரோனா என்பது தொற்றாளர்கள் உடன் தொடர்பு கொண்டால் மாத்திரமே பரவும் என்பது கிடையாது.
தொற்றாளார்களுடன் நேரடித்தொடர்பு கொள்ளாத சந்தர்ப்பங்களிலும் தொற்றுப்பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அதனை வெளியில் சொல்லாமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்துவிட்டு நோய் முற்றிய நிலையில் வைத்தியசாலைக்கு வந்த பல இளவயதுடையவர்களை நாங்கள் இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா என்பதற்கு காய்ச்சல், தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி. வயிற்றோட்டம், மூச்சுத்திணரல், மூக்கடைப்பு , மூக்கால் தண்ணி வடிதல் மற்றும் உடல் இயலாமை போன்றவையும் அதற்கு அறிகுறியாகவே கொள்ளப்படும். இரண்டு, மூன்று தினங்களுக்கு மேல் அதிகமாக காய்ச்சல் காணப்படல், நீர் அருந்தக் சிரமம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது.
அன்டிஜன் பரிசோதனை செய்தபின் எமக்கு தொற்றில்லை என சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறான அறிகுறிகள் இருந்து அன்டிஜன் பரிசோதனையில் தொற்றில்லை என வரும்போது கொரோனா உறுதியாக இல்லை என கூற முடியாது. ஒக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு நோயாளர் இருந்தால் நிச்சயமாக வைத்தியசாலைக்கு வர வேண்டிய தேவை இருக்கின்றது.
அவர்கள் சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு வரும் போதே மருத்துவங்களை உரிய நேரத்துக்கு தொடங்கி உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தேவையில்லாத மருந்துகளை வைத்தியர்களின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம். சினோபார்ம் தடுப்பூசி பெற்றவரை பொறுத்தவரை, இரண்டு டோஸையும் போட்டு இரண்டு கிழமைக்கு பின்னரே அவரது உடம்பில் பூரண நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். ஆகவே தடுப்பூசிகளை பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடுவதால் கொரோனா பரவாது என்பது இல்லை. ஆனால் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் தீவிரமான கொரோனா பரவுகின்ற சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும். தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற காரணத்துக்காக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் விடக்கூடாது. அனைத்தையும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment