மதுவெறியில் பாடசாலை மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!
மன்னார் மடுப்பகுதியில் மதுவெறிக் குழுவின் தாக்குதலுக்குள்ளான நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்றையதினம் மாலை மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் மேலதிக வகுப்பிற்கு 4 மாணவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 12 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவே இவ்வாறு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் காலை பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களிற்கு இடையில் சிறு முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து பாடசாலை அதிபரால் மாணவர்களுக்கிடையில் சமரசம் செய்யப்பட்டிருந்தது. பட்டப் பெயர் சொல்லி அழைத்ததாக இந்த சர்ச்சை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில், பாடசாலை முடிவடைந்த பின்னர் நான்கு மாணவர்கள் மேலதிக வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில், மற்ற மாணவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மதுவெறியில் கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதுடன் , கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
அவர்களின் தாக்குதலில் இருந்து மாணவரகளை மீட்ட பிரதேச மக்கள், மாணவர்களை வீடுகளுக்குள் அழைத்து காப்பாற்றியுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய வீட்டினை முற்றுகையிட்டு, மாணவர்களை தாக்க முற்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விடயத்தை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிபர் அயல் வீட்டவர்களின் பாதுகாப்பிலிருந்த மாணவர்களை வெளியில் அழைத்து மது போதையில் தாக்க வந்த குழுவோடு சமரசம் செய்ய முயற்சித்த நிலையில் அந்த குழுவினர் மீண்டும் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கியதையடுத்து, அவர்கள் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
தொடர்பில் மடு பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவர்களால் முறைப்பாடு கொடுக்கப்பட்டதுடன், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.
எனினும் மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று மதியம் வரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் , அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment