health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்:வலுக்கும் எதிர்ப்பு........!

 


சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமான தாக்குதலுக்கு பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் போன்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா   

மாவீரர் நாளன்று செய்தியாளர் ஒருவர் இராணுவத்தினர் சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மனித உரிமைகளை குறிப்பாக ஊடகவியலாளர்களின் உரிமைகளை மதிக்கும் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீடு அற்றவர்கள் சிலருக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகளை வட பிராந்திய கட்டளைத் தளபதி கையளித்த அதே சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக வட பிராந்திய இராணுவத் தளபதியின் கவனத்தை நாம் கோருகின்றோம்.

மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வட பிராந்திய கட்டளைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று நாம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மன்றம்  

தற்போதைய அரசாங்கம் நாடு முழுவதும் இராணுவ மயமாக்கலை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையிலே ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் இராணுவத்தின் பிடியில் நசுக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது என யாழ். ஊடக மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கையிலே குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் மற்றும் ஏனைய தரப்புகளாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றமையை யாழ் ஊடக மன்றம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

ஊடகவியலாளர்களின் கடமைகள் பொறுப்புகள் தொடர்பில் முப்படையினருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஊடக அமைச்சிற்கும் அரச தலைவருக்கும் உண்டென்பதை எப்போதும் நினைவு படுத்த விரும்புகின்றோம்.

ஊடகம் என்பது எப்போதும் நடுநிலையாக உள்ளதை உள்ளபடி சொல்லுகின்ற பணியை மேற்கொள்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதோடு குறித்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளும் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளது.  

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

வடகிழக்குத் தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெறும் கொடுமைகள் வெளிவருவதைத் தடுக்கவே, ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே வடகிழக்குத் தமிழர்களின் ஒரே நம்பிக்கையான ஊடகத்துறையை பாதுகாக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்குகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கே இந்ந நிலைமை எனில், பொதுமக்களுக்கு என்ன நிலை? என்பதைச் சற்றுச்சிந்திக்கவேண்டும்.

தமிழ்மக்களின் நம்பிக்கையாக இருக்கின்ற ஊடகத்துறையை தயவுசெய்து அடக்கி ஒடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதுடன், இதற்கு முறையான நீதிவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.இந்த விடயத்திலே நீதித்துறை முறையாகச் செயற்பட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினையும், சுயாதீனத் தன்மையையும் பாதுகாத்து, அதன்மூலம் எமது தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment