இலங்கையை விட்டு இளைஞர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை வெளியிட்ட உமா சந்திரபிரகாஸ்....!
ஒரு வளமான வாழ்க்கை இந்த நாட்டில் இல்லை என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று தனியார் விடுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியாக்க நாங்கள் முன்வந்திருந்தாலும் சில இனவாத கருத்துக்கள் மற்றும் வேறுபட்ட கருத்துக்களால் இந்த நாட்டில் இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது.
வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் மக்களாகிய நாம் துன்பங்களுக்கும், துயரங்களுக்குள்ளும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்திடம் ஒரு நிலையான மக்கள் நலன் பேணக்கூடிய எந்தவிதமான திட்டங்களும் இல்லை. மக்களைச் சந்திக்க முடியாமல் மக்களின் குறைகளைத் தீர்க்க முடியாமல் மக்கள் நலன் பேண முடியாமல் தோல்வியடைந்த அரசாங்கமாகவும், தோல்வி கண்ட ஜனாதிபதியாகவும் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
எங்களுடைய அரசங்கத்தினை பொறுத்தவரையில் மக்கள் எதிர்கால தூர நோக்கோடு இருக்கின்றார்கள். எனவே கட்சி கட்டமைப்பைப் பலப்படுத்தி அதனூடாக மாற்றத்தினை கொண்டு வந்து நாட்டின் தலையெழுத்தினை மாற்றியமைக்கும் மிக முக்கிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது.குறிப்பாக இளைஞர்களிடம் இந்த பொறுப்பு இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்ல தலைப்படுகின்றார்கள். ஒரு வளமான வாழ்க்கை இந்த நாட்டில் இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கின்றது.
இந்த நிலையை மாற்றி எங்களுடைய நாட்டில் மக்கள் சுபிட்சமாகவும், நம்பிக்கையோடும், நிம்மதியோடும் வாழும் பொறுப்பை எமது கட்சியின் தலைவர் சஜித் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கொண்டுள்ளனர்.
எனவே, இந்த பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். எனவே எம்மோடு தோளோடு தோள் நிற்க வேண்டும். இந்த மாற்றத்தினை நாம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment