மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலில் இணைத்தது ஏன்?
இலங்கை சர்வதேச ரீதியில் உருவாக்கி இருந்த நற்பெயருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகில் உள்ள சிறந்த ஆயிரம் வங்கிகளில் ஒன்றாவும் ஆசியாவில் சிறந்த 400 வங்கிகளில் ஒன்றாகவும் விளங்கிய இலங்கை மக்கள் வங்கியை சீனா, கறுப்பு பட்டியலில் சேர்த்தது. வங்கியின் தவறு காரணமாக சீனா இதனை செய்யவில்லை, அரசாங்கத்தின் தூரநோக்க நடவடிக்கைகளே இதற்கு காரணம்.
அரசாங்கம், விவசாயிகளையும் மக்கள் வங்கியையும் சேதனப் பசளைக்குள் தலையிட வைத்து, ஒரே நேரத்தில் அழித்து விட்டது. ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால், தற்போது வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பட்டிருக்கும். எமது நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தை விட அபிவிருத்தி, சௌபாக்கியத்தை எதிர்பார்த்து மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கினர்.
தற்போதைய அரசாங்கத்தினர் அன்று எமது நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்தாலும் அவர்களிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் இல்லை என்பது மக்களுக்கு தற்போது நன்றாக தெளிவாகியுள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment